பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எனவே உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகமே கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீல்டு கமாண்டர்கள் குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரசனை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தபோதும் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது. வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்து மாதங்களில் முதல் முறையாக பணவீக்கம் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.