பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடவில்லை என்றால் ஐசிசி நீக்க வேண்டும் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் சமீபத்தில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் விளையாட வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை.

ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools