பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 315 ரன்களை எடுத்திருந்தது.
சண்டிமால் 80 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டிக்வெலா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷாதிக் டக் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 16 ரன்னும், இமாம் உல் ஹக் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் 24 ரன்னும், பவாத் ஆலம் 24 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஆகா சல்மான் பொறுமையுடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.