ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ். இவர் காரில் ரூ.2 கோடி பணத்துடன் கோவை நோக்கி புறப்பட்டார். இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் பைபாஸ் அருகே இன்று காலை வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அவரை பின் தொடர்ந்து வந்த கார் வழி மறித்து நின்றது.
இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் விகாசை காரில் இருந்து கீழே இறக்கி விட்டுவிட்டு ரூ.2 கோடி பணத்துடன் அந்த காரையும் அவர்கள் வந்த காரையும் எடுத்து சென்று விட்டனர். இது குறித்து விகாஷ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த பணம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது. முறையாக ஆவணங்கள் உள்ளதா? என்று விசாரித்தனர். மேலும் ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியில் ஒரு கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கார் விகாஷ் ஓட்டி வந்த காரா? என்று கண்டுபிடிக்க போலீசார் விகாசை அழைத்து சென்றனர். அப்போது அந்த கார் விகாஷ் ஓட்டி வந்த கார் என்பது தெரிய வந்தது.
இது பற்றி தெரிய வந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.