Tamilசெய்திகள்

பவானில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது – மக்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன

கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நேற்று நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஈரோடு உள்பட காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கரையோரங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இன்று காலை 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இந்த வெள்ளத்தை கருங்கல்பாளையம் பாலத்தில் பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வருவதால் பவானி புது பஸ் நிலையம் அருகே உள்ள பாலா கியாஸ் இறக்கம் என்ற பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பவானி கூடுதுறையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.