பழ.நெடுமாறனிடம் விசாரணை மேற்கொள்ள உளவு அமைப்புகள் முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.