பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு இன்று கடைசி நாள் – புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நாளை பணிகள் தொடங்குகிறது
டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும்.
1927-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி இந்த கட்டிடத்தை வைசிராயாக இருந்த இர்வின்பிரபு திறந்து வைத்தார். இன்னும் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடம் நூற்றாண்டு விழாவை காணபோகிறது. கடந்த 97 ஆண்டு கால வரலாற்றில் இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மையமாக இந்த பாராளுமன்ற கட்டிடம் திகழ்கிறது. பழமை காரணமாக இந்த கட்டிடத்துக்கு விடை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பேரில் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்ற கூட்டத் தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்து வந்தது.
இந்த நிலையில் அந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (திங்கட்கிழமை) விடை கொடுக்கப்பட்டது. இதன் மூலம் புகழ் பெற்ற இந்திய பாராளுமன்ற வட்ட வடிவ கட்டிடம் இன்று மாலை முதல் ஓய்வுக்கு செல்கிறது. அதற்கு விடை கொடுக்கும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் 75 ஆண்டு கால வரலாற்று பயணம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பேசினார்கள்.
இதன் மூலம் பழைய பாராளுமன்ற கட்டிடம் இன்று தனது கடமையை வெற்றிகரமாக முடித்துள்ளது. நாளை முதல் பாராளுமன்ற அலுவல்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும். இதற்காக நாளை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் ஒன்றாக கூடுவார்கள். அங்கிருந்து அவர்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்வார்கள்.
இதையொட்டி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கோலாகலமாக விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.