Tamilசெய்திகள்

பழைய கோவில்களின் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் சேகர் பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்து பேசினார்.

கேள்வி: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், ஆதி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா?

அமைச்சர் பதில்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் என்பது அரங்கநாதனின் மச்சாவதாரம் கொண்ட முதல் கோவிலாகும். கோவிலுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன. உறுப்பினர் கோரிய பக்தர்கள் தங்கும் விடுதியானது ரூ.86.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வருகின்ற 16.07.2024 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு பணி இறுதி செய்யப்படும்.

அடுத்த மாதம் இறுதிக்குள் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு சிறப்பு பூஜைகள் செய்து பணிகளை தொடங்கிக் கொள்ளலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 17 கோவில்களில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கேள்வி: கள்ளக்குறிச்சி வட்டம் வரஞ்சரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பசுபதீசுவரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அமைச்சர் ஒப்புதல் தருவாரா?

அமைச்சர் பதில்: இந்த பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு 1992-ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது. 1,000 ஆண்டு பழமையான கோவில் பட்டியலில் இந்த கோவிலையும் இணைத்து அதற்கு தொல்லியல் துறை, மண்டலக்குழு மாநில வல்லுனர் குழு ஒப்புதல் பெறப்பட்டிருக்கின்றது. மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: சின்னசேலம் வட்டம் கூகையூர் ஊராட்சியில் அமைந்துள்ள சொர்ண புரீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்ற ஒரு கோவிலாகும். கோவிலை புனரமைத்து குடமுழுக்கு செய்யப்படுமா?

அமைச்சர் பதில்: சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு 2008-ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது அந்த கோவிலுக்கும் மாநில குழு மற்றும் மண்டல குழு ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வருமானம் இல்லாத கோவில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்து, திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்து, திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அதன்படி இந்த கோவிலின் திருப்பணி இந்தாண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.