X

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் தமன்னா

புகழ்பெற்ற நடிகர்- நடிகைகளின் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் வித்யா பாலன் நடித்து தேசிய விருது பெற்றார். இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோரது வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ பெயரில் படமாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா, நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது.

அந்த வரிசையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஜமுனாவின் வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.