Tamilசெய்திகள்

பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா – இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’, ‘தண்டாயுதபாணிக்கு அரோகரா’ என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.

பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.