பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த மாதம் 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உள்பட ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று நடிகர் சந்தானம் பழனி கோவிலுக்கு சென்று அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார். பழனி அருகே சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் படபிடிப்புக்கு இடையே பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.