மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பழனி போலீசாரிடம் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பழனி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்ற அதி விரைவுப்படையினர் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதில் கைதான குற்றவாளிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவுப்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.