பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் – மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் மொத்த மக்கள் தொகையில் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால், அரசு வேலைவாய்ப்பில் அந்த சமூகத்தினர் மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே, அவர்களின் துல்லியமான எண்ணிக்கையை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 18 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைவுபடுத்தி, ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள். பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். 100 யூனிட்வரை இலவச மின்சாரமும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக்கும் வழங்கப்படும். 5 குதிரை சக்திவரை கொண்ட மோட்டார் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்புவரை இலவச கல்வி அளிக்கப்படும். மேலும், முதல் வகுப்பு முதல் 8-ம்வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.500-ம், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.ரூ.1,000-ம், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news