Tamilசெய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்க புதுவை அரசு முடிவு!

புதுவை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் (2019-20) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக உணவு பாதுகாப்பு படியின் உணவு தானியங்கள் மற்றும் சமைப்பதற்குண்டான செலவினம் (மார்ச்-ஆகஸ்டு) முதல் தவணையானது இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன்படி இன்று காலையில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை (புதன்கிழமை) காலை 3-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 18-ந்தேதி காலையில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும். அதாவது காலை 10 மணிமுதல் 1 மணி வரைக்கும் மாலை 2 மணி முதல் 5 மணி வரைக்கும் இதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படித்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அந்த பள்ளிகளுக்கு அட்டவணைப்படி சென்று உணவு பாதுகாப்பு படியின் முதல் தவணையை உணவு பங்கீட்டு அட்டை, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த உணவு படியானது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கம் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும்பொருட்டு பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்கள் அந்த புத்தகங்களை படித்து அவற்றில் ஒன்று அல்லது இரண்டு பக்க மதிப்புரைகளை தங்கள் பெற்றோர்களின் உதவியுடன் எழுதி பள்ளிகள் திறக்கப்பட்டபின் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியில் சமர்ப்பிக்கப்படும் சிறந்த 3 மதிப்புரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.