பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை இத்திட்டம் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு செயல் படுத்தப்பட்டது.
வடசென்னை பகுதியில் உள்ள 37 மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளில் கிச்சடி சேமியா, கேசரி வழங்கப்பட்டது. மறுநாள் (சனிக்கிழமை) சென்னையில் அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் செயல்பட்டன. இன்று 3-வது நாளாக காலை சிற்றுண்டி பள்ளி குழந்தைகளுக்கு 6 சமையல் கூடங்களில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது.
காலை உணவு எவ்விததாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளதால் அதனை முறையாக செயல்படுத்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
சி.எம்.13எப்.எஸ். என்ற செயலி மூலம் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். அதிகாலையில் சமையல் செய்ய தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் வினியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை இந்த செயலி மூலம் உடனுக்குடன் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரே இதனை கண்காணிக்கும் வகையில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. எந்த சமையல் கூடத்தில் உணவு வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிறதா என்பதை இதன் மூலம் கண்காணிக்கிறார்கள். சரியான நேரம், தாமதம், விடுமுறை போன்ற விவரங்கள் செயலி மூலம் பெறப்படுகின்றன. தாமதம் ஏற்பட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.