பள்ளி கழிவறையில் சிகரெட் பிடித்த 10ம் வகுப்பு மாணவிகள் – போலீசார் விசாரணை

கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் உள்ள பிரபலமான அரசு பெண்கள் பள்ளியில் நேற்றுமுன்தினம் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.

மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலவித கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. மாலை 4 மணி அளவில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறைக்கு சென்றார். அங்கு 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

ஒரே சிகரெட்டை 4 பேரும் மாற்றி, மாற்றி பிடித்து புகை விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்ததும் 7-ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு மாணவி தங்களை பார்த்து விட்டாரே என 10-ம் வகுப்பு மாணவிகளும் பதட்டம் அடைந்தனர்.

அவர்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டினர். மேலும் யாரிடமும் அவர் சொல்லி விடக்கூடாது என்ற அச்சத்தில் அந்த மாணவியின் தலைமுடியை கத்தரியால் எடுத்து வெட்டி விட்டனர். அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் செய்தார்.

இந்த விவகாரம் பள்ளி முழுவதும் பரவியதை தொடர்ந்து கொல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கல்வி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools