பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன முறையில் தண்டனை – பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அந்த மாணவரின் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பின்னர் முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சேதமடைந்த பொருளை மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றித்தர வேண்டும்.
பஸ்களில் தொங்கிக்கொண்டு பயணம், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங், சாதி-மத அடிப்படையில் பிற மாணவர்களை புண்படுத்துதல், உருவகேலி, பள்ளிச்சுவர்களில் படங்கள் வரைதல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்றவை மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகும்.
இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவருக்கு முதலில் பள்ளி ஆலோசகர் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். அந்த மாணவர் 2-வது, 3-வது முறையாக இதே தவறை செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.
அதன் விவரம் வருமாறு:-
5 திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட வேண்டும்.
2 நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும்.
5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும். ஒரு வாரத்துக்கு வகுப்பு தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.
5 வரலாற்று தலைவர்கள் பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.
நல்ல பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றி வரைபடம் (சார்ட்) எழுதவேண்டும். பள்ளியில் சிறிய காய்-கனி தோட்டம் அமைக்கவேண்டும். பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினைப்பொருட்கள் தயாரிக்கவேண்டும். அந்த மாணவருக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து, ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கச் செய்ய வேண்டும். அதற்கு பிறகும் அந்த மாணவர் தவறை உணரவில்லை என்றால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து குழந்தைநேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்கலாம். அதன் பின்னரும் தவறுகள் தொடர்ந்தால் அருகேயுள்ள அரசு பள்ளிக்கு அந்த மாணவரை மாற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.