பள்ளிகளில் இனி நொறுக்குத்தீனிகள் விற்க கூடாது! – மத்திய அரசு அதிரடி

பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் விற்க தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ‘கேண்டீன்’கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கேண்டீன்களில் மாணவர்களின் நலனை பேணும் விதத்தில் உணவுகள் விற்கப்படுவதே சரியானது. ஆனால் கேண்டீன்களில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

எப்போதுமே அதிக கொழுப்புகள் நிறைந்த, அதிக காரம் நிறைந்த, அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் மேற்கண்ட விதமான உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது. இதுகுறித்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறுதல் கூடாது. இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணையாக இருக்கும். இதர தரமற்ற பொருட்கள் அவர்களது உடல்நலனை பாதிக்கும்.

எனவே மாணவர்களின் உடல்நலம் பேணுவது முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்று அமல்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் என்ன வகையான உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்? அது தரமானதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அமைத்துள்ள கண்காணிப்பு குழுவுடன் இணைந்தும் பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் வளாகத்தில் உள்ள கேண்டீன்களில் என்னென்ன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன? உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும்.

பள்ளி வளாகங்களிலும் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை மூலம் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools