X

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ரத்தா? – அமைச்சர் விளக்கம்

கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்தும், கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அதற்கேற்ப அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுத்து பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்துள்ள பரிந்துரையில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து’ செய்ய வேண்டும் என்றும், அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அக்டோபர் மாதம் திறக்கவும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகளை ஆலோசித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அரசின் முடிவு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, ‘பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இன்னும் இறுதி செய்யவில்லை.’ என்றார்.

இதுதொடர்பாக மேலும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ரத்துசெய்வது குறித்து இன்னும் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஆரம்பக்கட்ட ஆலோசனையை தொடங்கிவிட்டோம். இதில் முடிவு எடுக்க கவர்னர், முதல்-அமைச்சரிடம் அனுமதி வாங்கவேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதன்அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும். சிலநேரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் முடிவுகளை அப்படியே நாம் கையாளுவதும் இல்லை. சிலநேரங்களில் தளர்வும், சிலநேரங்களில் அதனை ஏற்றும் முடிவுசெய்கிறோம். எனவே தேர்வு ரத்துசெய்யப்படுவது குறித்து முடிவுகளை எடுத்து அறிவிப்பதற்கு காலதாமதம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.