வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெற்பயிற்கள், வாழை உள்ளிட்டவைகள் கடும் சேதம் அடைந்துள்ளது. வயல்வெளிகளில் தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகி பாதித்துள்ளது. ஏராளமான ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் உயிர் இழந்துள்ளன. குடிசைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு சேத விவரங்களை கணக்கிட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் நாளை அறிக்கையாக வழங்க இருக்கிறார்கள்.
அதன்பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.