பற்கள் பிடிங்கப்பட்ட விவகாரம் – ஐ.ஏ.எஸ் அமுதா முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க 4 பேர் ஆஜர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 10-ந்தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை தொடங்கியது.

இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை வந்தடைந்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதையொட்டி தாலுகா அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து 16 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் மற்றும் 21 வயது வாலிபர் ஒருவர் ஆகிய 3 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools