பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – கர்நாடக முதலமைச்சர் சித்தரமையா பேட்டி
தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நகைக்கடைகள், தொழில் அதிபர்கள், காண்டிராக்டர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமான வரித்துறையினரின் இந்த சோதனையில் சுமார் ரூ.102 கோடி ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருமான வரி சோதனையில் சிக்கிய பணம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என்றும், 5 மாநில தேர்தல்களுக்காக கர்நாடகத்தில் ரூ.1,000 கோடி வசூலித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு செலுத்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜனதா குற்றம்சாட்டியது. மேலும், கர்நாடகத்தை காங்கிரஸ் கட்சி ஏ.டி.எம். ஆக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்து மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருமான வரி சோதனையில் சிக்கிய பணம் காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது என கூறுவது அரசியல் அறிக்கை. ஆதரமற்ற குற்றச்சாட்டு. பா.ஜனதா கூறும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. காங்கிரஸ் ஒப்பந்ததாரர்கள், பா.ஜனதா ஒப்பந்ததாரர்கள் என இருக்கிறார்களா?. பா.ஜனதாவினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே?. அவர்களின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். கர்நாடகத்தில் நாங்கள் போட்டியிட போது வேறு மாநிலங்களுக்கு பணம் கேட்டு சென்றோமா?. மக்கள் தான் எங்களை ஆசிர்வதிக்கிறார்கள். மற்ற மாநில தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு வழங்க கர்நாடக காங்கிரஸ் கட்சி ரூ.1,000 வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சி.டி.ரவி குற்றம்சாட்டி உள்ளார். பொய்களை மட்டும் பேசும் அவரது குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ரூ.1,000 கோடி வசூல் செய்யுமாறு யாராவது கேட்க முடியுமா?. இதுவரை எங்கள் கட்சி மேலிடம் 5 பைசா கூட எங்களிடம் கேட்கவில்லை.
வருமான வரி சோதனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். வருமான வரி சோதனை குறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட முடியுமா?. சோதனை நடத்தியது வருமான வரித்துறையினர். அவர்கள் தான் விசாரிக்க வேண்டும். அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில் எந்த விசாரணையும் நடத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.