பறவை காய்ச்சல் பீதி – கோழி இறைச்சி விலை கடும் சரிவு
சில மாதங்களுக்கு முன்பு கோழி இறைச்சி வியாபாரம் கொடி கட்டி பறந்தது.
முன்பு கோழிக்கறி ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனையானது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் பற்றி பீதி பரவி வருகிறது. கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினார்கள்.
இதனால் கோழிக்கறி விற்பனை படிப்படியாக குறையத் தொடங்கியது. கோழி வியாபாரிகள் புகார் செய்ததையடுத்து கோழிக்கறி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோழிகளை கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
என்றாலும், கோழி இறைச்சி விலை தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கோழி பண்ணைகளில் இருந்து முன்பு ஒரு கிலோ கோழி ரூ.100-க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டது. பின்னர் அது ரூ.80 ஆனது. இப்போது கோழி பண்ணைகளில் ஒரு கிலோ உயிருள்ள கோழி ரூ.36-க்கு விற்கப்படுகிறது.
கடைகளில் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.60-க்கு விற்கப்படுகிறது. என்றாலும், கோழி இறைச்சியை யாரும் விரும்பி வாங்கவில்லை. பல இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி வாங்கினால் 4 முட்டைகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு சலுகைகளை வழங்கினாலும் கோழி இறைச்சி வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் இல்லை. எனவே கோழி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையும் குறைந்துள்ளது. 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டை தற்போது ரூ.4.20 ஆகி இருக்கிறது.
கொரோனா, பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கோழி பிரியாணி விற்பனையும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பெரிய ஓட்டல்களிலும், சிறிய பிரியாணி கடைகளிலும் கோழி பிரியாணி விற்பனை இல்லை.
இதனால் கோழி இறைச்சி வியாபாரிகளும், சிறிய பிரியாணி கடைக்காரர்களும் மிகுந்த அவதிப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோழி மொத்த வியாபாரி தண்டையார் பேட்டை உசேன் கூறியதாவது:-
கொரோனா, பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கோழிக்கறி விற்பனை முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. வாங்கிய விலைக்கே விற்க முன்வந்தாலும் கோழிக்கறி வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
இதனால் கோழி வியாபாரிகளும், அவர்களை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களும் இந்த தொழிலை விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோழி வியாபாரிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் 26 தடுப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரி, கார் உள்ளிட்டவற்றை சோதனை செய்து பின்னரே அனுப்புகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளது. இங்கு தினமும் 10 லட்சம் கிலோ கறி கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோழிகள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கறிகோழிகள் வாங்க அச்சப்படுகின்றனர். இதனால் கோழி இறைச்சியின் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சில இடங்களில் ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்ற நிலையிலும் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் கோழி இறைச்சியில் கொரோனா என பரவியதால் இறைச்சி உற்பத்தி பாதியளவு குறைந்தது. இந்த நிலையில் பறவை காய்ச்சல் காரணமாக மீண்டும் பல்லடத்தில் உள்ள கோழி பண்ணைகளில் சுமார் 30 சதவீதத்திற்கு கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.