X

பர்கினா பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோ, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளின் கோர தாக்குதல்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிருக்குப் பயந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.

பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் சல்மோசி பகுதியில் உள்ள மசூதியில் இன்று பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.