பருவ மழையால் தமிழகத்தில் 4,133 பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் – அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் உதயகுமார் ஆலோசனைகள் வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடர்பாக தமிழக அரசு டி.என். ஸ்மார்ட் என்ற செயலியை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலி மூலம் எளிதாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பருவ மழையால் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 133 பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் மொத்தம் 4 ஆயிரத்து 834 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் முடிய சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக நமக்கு மழைப்பொழிவு கிடைத்துள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 341.9 மில்லிமீட்டர். ஆனால் இந்த ஆண்டு 424.4 மில்லிமீட்டர் மழை நமக்கு கிடைத்திருக்கிறது. வடகிழக்கு மழையை பொறுத்த அளவில் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கிடைக்கும். அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வடகிழக்கு பருவமழை பொழியும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்தாண்டு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சற்று தாமதமாக கடந்த 28-ந் தேதி தொடங்கி இருக்கிறது. கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் மொத்தம் 187.3 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது 45 சதவீதம் பற்றாகுறையாகும். தமிழகத்தில் 4 மற்றும் 5-ந் தேதிகளில்(இன்றும், நாளையும்) மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழக அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, ஆழியாறு, கிருஷ்ணகிரி மற்றும் திருமூர்த்தி ஆகிய அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக இருக்கிறது. ஆனால் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெருஞ்சாணி, சோலையாறு, வைகை மற்றும் சாத்தனூர் ஆகிய அணைகளில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டைவிட குறைவாக இருக்கிறது. அதேபோல சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகியவற்றில் கடந்த ஆண்டு இன்றைய தேதியில் உள்ள நீர் கொள்ளளவைவிட அதிகமாக உள்ளது. வீராணம் நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டை விட நீர் கொள்ளளவு குறைவாக உள்ளது. இது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த நிலவரம்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 321 பகுதிகளில் 5 அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. 797 பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி வரை நீர் தேங்குகிறது. 1,096 பகுதிகளில் 2 அடி முதல் 3 அடிவரை தண்ணீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. 1,919 பகுதிகளில் 2 அடிக்கும் குறைவாக தண்ணீர் தேங்குகிறது. ஆக மொத்தம் 4 ஆயிரத்து 133 இடங்களில் தொடர் மழையோ, கன மழையோ, பெய்தால் நீர் தேங்கும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி தேங்குகிறபோது அதை உடனடியாக வெளியேற்றுவதற்கு அரசு அலுவலர்களை நியமித்து உள்ளது. மதுரையை பொறுத்த அளவில் 24 இடங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.