X

‘பராசக்தி’ திரைப்படம் இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும் – கனிமொழி எம்.பி நெகிழ்ச்சி

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் கடந்த 1952ம் ஆண்டு வெளியான படம் ‘பராசக்தி’. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இப்படத்தில் ‘ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன்’ என்று சிவாஜி பேசும் வசனம் இன்றளவும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு ‘பராசக்தி’ படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பிரபுவுக்கு சால்வை அணிவித்து கனிமொழி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘பராசக்தி’ திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.