பயோ பபுள் விதிமுறையை மீறினால் ரூ.1 கோடி அபராதம் – ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
கொரோனோ வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்தி வருகிறது
கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் பயோ-பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இதில் இருக்கும் வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த கூடாது. ஒருவேளை வீரர்கள் விதிமுறையை மீறினால் ஆறுநாள் தனிமைப்படுத்தப் படுவார்கள். மீண்டும் விதிமுறையை மீறினால் ஒரு போட்டியில் தடைவிதிக்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையாக மீறினால் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள்.
சென்னை அணியின் கே.எம். ஆசிப் பயோ-பபுள் விதிமுறையை மீறியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் வீரர்களை வெளியே அனுமதித்தால் அந்த அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறையாக அனுமதித்தால் ஒரு புள்ளி திரும்பப் பெறப்படும் என்றும், மூன்றாவது முறையாக அனுமதித்தால் 2 புள்ளிகள், அதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் புள்ளிகள் கழிக்கப்படும் எனவும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.