ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகினார். 6 மாத கால பதவி நீட்டிப்பை நிராகரித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லாங்கர் ராஜினாமா தொடர்பாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜான்சன் டெஸ்ட் கேப்டன் கம்மின்சை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதேபோல முன்னாள் கேப்டன்கள் டெய்லர், ரிக்கி பாண்டிங் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் லாங்கருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் கம்மின்ஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு முன்னாள் கேப்டன் கிளார்க் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கம்மின்ஸ் மவுனம் கலைத்தார். அவர் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:-
ஜஸ்டின் லாங்கருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தனது பயிற்சி பணி தீவிரமானது என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக லாங்கர் வீரர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். மன்னிப்பு தேவையற்றது என நான் நினைக்கிறேன்.
அவரது அணுகுமுறையால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வாரியம் துணிச்சலான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சேவை செய்வதே எங்களது முதல் கடமையாகும். நீங்கள் (முன்னாள் வீரர்கள்) எப்படி உங்கள் சக வீரர்களுக்காக போராடுகிறீர்களோ அதுபோல் நானும் போராடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.