பயங்கரவாதி ராணாவை இந்தியா முழுவதும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான்- அமெரிக்கா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவரது நெருங்கிய நண்பர் ராணா. ராணாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு 18 நாட்கள் ராணாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாகவும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராணாவை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவரை பல நகரங்களுக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
மேலும், கொச்சியில் ராணாவின் குரல் மாதிரிகளும் ஆய்வு செய்யபடவுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் காவலில் இருக்கும் முக்கிய சாட்சி ஒருவர் கொச்சியை சேர்ந்தவர்.அவர் பயங்கரவாதி ராணா மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோருக்கு உதவியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தவும் ராணாவை தெற்கு பகுதி நகரங்களுக்கு அழைத்து வருகின்றனர். ராணாவிடம் விசாரணை நடத்தும் 19 என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவில் 2 பேர் கொச்சியை சேர்ந்தவர்கள். ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு ராணா முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் அவர் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக அவர் மும்பையில் இருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.