Tamilசெய்திகள்

பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம் – முப்படை தளபதி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளனர்.

அங்கு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பக்கத்து நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம் என்று முப்படை தளபதி விபின்ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விபின் ராவத் பேசியதாவது:-

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது. அதற்கு 2 மாதங்கள் ஆகும் என்று கருதியது. ஆனால் குறுகிய காலத்துக்குள்ளேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது ஆச்சரியம் அளித்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள், ஊடகங்கள் மூலம் அந்த நாட்டு தலிபான்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து வருகிறோம். அதன்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் எப்படி இருந்தார்களோ அதேபோன்று தான் இப்போது இருக்கிறார்கள்.

அவர்களின் கூட்டாளிகள் மாறி இருக்கிறார்கள். ஆனால் தலிபான்களிடம் மாற்றம் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து இந்தியாவுக்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக்கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பயங்கரவாதத்துக்கான யுத்தத்தில் குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம் இருந்து உதவி கிடைத்தால் வரவேற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.