பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீநகரின் ஜாமியா மசூதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல் முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர்அப்துல்லா கூறியதாவது:-
மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அந்த நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத மற்றும் தன்னிச்சையான போராட்டங்களை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல்முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.