கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியம் தருபவை. அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம். கடற்கன்னிகள் போன்ற உயிரினங்கள் உண்மையா, பொய்யா என்பதை தாண்டி குழந்தைகளுக்கு இது போன்ற கடற்கன்னிகளும், அவை மனிதர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவுவது குறித்த தகவல்களும் மிகவும் பிடித்தமானவை.
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby). நேற்று, அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ (New Irelanders Only) எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டது.
இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” (globster) என அழைக்கப்படுவதாக “லைவ் சைன்ஸ்” எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்றும் அந்த வலைதளம் தெரிவிக்கிறது. இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கன்னி குறித்த “தி லிட்டில் மெர்மெய்ட்” எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது. இந்நேரத்தில் இந்த “கடற்கன்னி” கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.