பப்ஜி கேம் விளையாடியதால் 25 வயது வாலிபருக்கு நடந்த சோகம்!

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் ‘கேம்’களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் ‘பப்ஜி’ விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.

இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. அதேசமயம், தொடர்ந்து இந்த கேமை விளையாடுவதால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக பப்ஜி விளையாடியபோது மூளை பக்கவாதம் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.

புனே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் மீமான் என்ற அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிக ஆர்வத்துடன் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் இளைஞர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பப்ஜி கேம் மட்டுமின்றி எந்த கேமாக இருந்தாலும் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதை பெற்றோர்கள் கண்காணித்து, மொபைல் போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news