பன்னீர் செல்வத்தின் தம்பி நீக்கம் வெறும் நாடகம்! – தங்க தமிழ்செல்வன்
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் போல் நடத்தப்பட்டது. கூட்டத்தை காட்டுவதற்காக ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேலை அட்டையை புதுப்பித்து தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார். டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நான் இப்போது சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா பணம் கொடுத்து தோற்கடித்து விட்டார். இதுதொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் விலகி விடுவோம் என கூறியதால், வேறுவழியின்றி ஓ.ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் என்ன பேரம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அவரை மீண்டும் கட்சியில் இணைத்து விட்டனர். இது ஏமாற்று வேலை. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.