2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது மைதானத்தில் ஒளிபரப்பான டெலிவிஷன் காட்சியின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவன் சுமித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டும் தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.
இதனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட் உள்பட பலர் இந்த விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி சந்தேகம் மீண்டும் எழாமல் இருக்க தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்காக நாங்கள் நேர்மையுடன் விளையாடி வருகிறோம். அதில் பெருமிதம் கொள்கிறோம். கேப்டவுன் டெஸ்ட் விவகாரத்தில் எங்களுடைய நேர்மையை கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்களும், சில பத்திரிகையாளர்களும் கேள்விக்குறியாக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு நாங்கள் ஏற்கனவே பலமுறை பதில் அளித்து விட்டோம். இருப்பினும் இந்த பிரச்சினையில் நாங்கள் மீண்டும் முக்கிய விஷயங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று நினைக்கிறோம். ஸ்டேடியத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பான காட்சியை பார்க்கும் வரைக்கும் வெளியில் இருந்து கொண்டு வந்த பொருளை வைத்து பான்கிராப்ட் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த விஷயம் எதுவும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் பவுலர்கள் என்ற காரணத்தால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து எங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த போட்டியில் நடுவராக பணியாற்றிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். பந்தை தேய்க்கும் காட்சி டெலிவிஷனில் வெளியான பிறகு பந்தை ஆய்வு செய்த நடுவர்கள் அதனை மாற்றவில்லை. ஏனெனில் பந்தை சேதப்படுத்தியதற்கான அறிகுறி எதுவும் அதில் தெரியவில்லை. இதனையெல்லாம் அன்று களத்தில் நடந்தது தவறில்லை என்று சொல்வதற்கு காரணமாக குறிப்பிடவில்லை. அன்று நடந்தது தவறாகும். அதுபோல் ஒருபோதும் நடந்து இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் இருந்து நாங்கள் நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். எங்களது நடத்தை, ஆடும் விதம், ஆட்டத்தை மதிப்பது ஆகியவைகளில் நல்லவிதமான மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மனிதராகவும், வீரராகவும் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் எங்களது அர்ப்பணிப்பு தொடரும். எங்களை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரம் அணியின் பவுலர்களுக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பான்கிராப்ட் தனது நிலைப்பாட்டில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விசாரணை கமிட்டியினர் பான் கிராப்ட்டை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர்களிடம், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தன்னிடம் குறிப்பிடத்தக்க புதிய தகவல் எதுவும் இல்லை’ என்று பான் கிராப்ட் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.