Tamilசெய்திகள்

பத்ரா சால் முறைகேடு வழக்கு – சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிப்பு

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.