பதிப்புரிமை, காப்புரிமைகள் ,ராயல்டி என எதுவும் இல்லாதது யோகா – பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
அவர்களோடு அமர்ந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் தெரிவித்தார்.
‘யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது. பதிப்புரிமை,காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம்.
விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர். யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி’ எனவும் பிரதமர் மோடி பேசினார்.