பதவியை ராஜினாமா செய்ய தயார்! – முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். அவர்கள் உள்கட்சி மோதலில் பா.ஜனதாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாக எடியூரப்பா பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கூட்டணி கட்சி மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது. காங்கிரசை சேர்ந்த சோமசேகர் எம்.எல்.ஏ. சித்தராமையா ஆட்சியை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினர்.

இதே போல மந்திரி நாகராஜ் கூறும்போது, கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றார்.

இவர்களது பேட்டியை பார்த்து அதிருப்தி அடைந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இன்று காரசாரமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் ஆகும். இவர்கள் இப்படிபேசுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சித்தராமையா தான் முதல்வர் என்று கூறி வருகிறார்கள். வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அவர்களது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். கூட்டணி அரசின் எல்லா வி‌ஷயங்களிலும் அவர்கள் (காங்கிரஸ்) தலையிட்டு வருகிறார்கள். நான் இதை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறேன். எல்லா நேரங்களிலும் இது மாதிரி இருக்கமுடியாது. அவர்கள் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரசாமி பேட்டிக்கு பதில் கூறும் வகையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதில் தவறு இல்லை. 5 ஆண்டு காலம் சித்தராமையா சிறப்பான ஆட்சியை நடத்தினார். அதனால் அவரை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அவர்தான் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் என்பதால், அவரை முதல்வர் என்று எம்.எல்.ஏ.க்கள் அழைக்கிறார்கள். குமாரசாமி முதல்-மந்திரியாக தொடர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி ஆட்சியை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ. சோமசேகருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீசு அனுப்பப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools