Tamilசெய்திகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் 32 வகையான தீவிர உடல்நல கேடுகள் உருவாக வாய்ப்பு – ஆய்வில் தகவல்

அவசர உணவு தேவைக்கு வீடுகளிலும் உணவகங்களிலும் பதப்படுத்தப்பட்ட உணவு (Processed Foods) வகைகளை பயன்படுத்துதல் தவிர்க்க இயலாத நடைமுறையாக மாறி வருகிறது.

இயற்கை உணவு வகைகளில் பலவிதமான ரசாயன கூட்டுகளை சேர்த்து, தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், “தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்” அல்லது “அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள்” (Ultra-processed Foods) எனப்படும்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடிமக்களின் உணவு வகைகளில் சுமார் 50 சதவீதம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உணவு வகைகளினால் உடல்நலனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல லட்சம் மக்களை உள்ளடக்கி செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள், கட்டுரையாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (British Medical Journal) எனும் மருத்துவ பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், 32 வகையான தீவிர உடல்நல கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது. புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள், மனநல பாதிப்பு, சுவாச மண்டல குறைபாடுகள், இருதய மற்றும் ரத்தக் குழாய் குறைபாடுகள், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவை வழிவகுக்கின்றன.

உடலாரோக்கிய மேம்பாட்டிற்கு இத்தகைய அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பேக்கரி உணவு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படு தயாரிக்கப்படும் உணவுகள், வறுவல் வகைகள், புரதச் சத்து “பார்” மற்றும் பவுடர்கள், உடனடியாக சாப்பிடும் (ready-to-eat) உணவுகள், ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அடங்கும்.

இத்தகைய உணவு பொருட்களை தயாரிக்கும் பொழுதோ அல்லது இவற்றில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருள்களை தயாரிக்கும் பொழுதோ, அவற்றில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டு, அடர்தன்மைக்காகவும், சுவைக்காகவும், அழகான தோற்றத்திற்காகவும் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டு, கெட்டு போகாமல் இருக்க “பிரிசர்வெட்டிவ்” (preservative) எனும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு, அத்துடன் அளவிற்கு அதிகமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவை சேர்த்து செயற்கையான முறையில் சிறு மற்றும் பெரும் உற்பத்திசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய தயாரிப்புகள் உற்பத்திக்கூடங்களிலிருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் காலம், மக்களிடம் விற்பனை செய்யப்படும் வரையில் கடைகளில் உள்ள நாட்கள், பயன்படுத்தும் வரை வீடுகளில் ரெஃப்ரிஜிரேட்டர்களில் வைத்திருக்கும் காலம் ஆகியவை கடந்தும் சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மிக குறைவு என்பதால் மனிதர்களின் சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறனை இவை படிப்படியாக குறைத்து விடும் என ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.