இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை பண்டிகை காலங்களில் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கொரோனா தடுப்பு அணுகுமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:
முக கவசம் அணிவது, கைகளை ஒழுங்காக கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.
கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் மேற்கூறிய இதுபோன்ற கொள்கைகளைப் பின்பற்றுவது என்பது மிக முக்கியம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சத்தீஸ்கர், கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் 58 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதேபோல், கேரளா (4,287), கர்நாடகம் (3,130), மேற்கு வங்காளம் (4,121), மகாராஷ்டிரா (3,645) மற்றும் டெல்லி (2,832) ஆகிய 5 மாநிலங்களில் 49.4 சதவீத கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இந்த மாநிலங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இதற்காக குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், கொரோனாவை எதிர்கொள்வது பற்றி அந்தந்த மாநிலங்களுடன் நாங்கள் மீண்டும் பேசுவோம் என தெரிவித்துள்ளார்.