பண்டிகையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்!
பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.
இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.
சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை- பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை – தஞ்சாவூர், சென்னை-மயிலாடுதுறை, சென்னை-கரூர் இடையே இயக்கப்பட்ட பஸ்களிலும் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை கட்டணமாக பெற்றனர்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.