பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை! – டி.ஜி.பி எச்சரிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அன்று போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

அந்த சுற்றறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்போனை பயன்படுத்தினார்கள்.

செல்போனை பயன்படுத்திய 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பணி நேரங்களில் போக்குவரத்து போலீசார் செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

செல்போனை பணி நேரங்களில் பயன்படுத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

இந்தநிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.

அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools