ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காணொலி மூலம் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை
கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஐந்து முதல்வர்களுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுதியில்,
பிரதமர் திடீரென பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார்.
மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும்,
அதன் விளைவுகள் மாநிலங்களில் பிரதிபலிக்கின்றன.
பணவீக்கம் பிரச்னை தொடர்பாக, அனைத்து முதல்வர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்தையும் கேட்கும்படி, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
இதன் மூலம், மாநிலங்களும் தங்கள் தரப்பை கருத்தை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, அனைத்து
முதல்வர்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தி தீர்வுகளை கண்டறிவதன் மூலம் சாமானியர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
——————-
இந்தி மொழி தான் தேசிய மொழியா? – மக்களிடம் கருத்து கேட்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாட்டில் அலுவல் மொழியாக
ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தமிழகம் உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
அம்மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், இந்தி மொழி குறித்து கூட்டாக முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களுடன்
விவாதிக்க உள்ளதாக கூறினார்.
எங்கள் நாடு பல்வேறு மொழிகள் மற்றும் தாய்மொழிகளைக் கொண்ட ஒரு பரந்த நாடு என்றும், இந்தி மொழி குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை, ஏனென்றால் நான் மற்ற முதல்வர்களுடன்
விவாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை கொல்கத்தா
திரும்புவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.