Tamilசெய்திகள்

பணவீக்கம் குறித்து மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸுக்கு தகுதி இல்லை – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் நேற்று வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் வந்து வாக்களிக்கிறார்கள். அவர்கள் என்னுடன் ஆர்வமாக பேசியதை பார்க்கும்போது, பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் காலத்தில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், புத்தொழில், தொழில் முதலீட்டிற்கான நல்ல சூழல் பெங்களூருவில் உள்ளது.

சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நல்ல சூழல் உள்ளது. நான் பா.ஜனதாவுக்கு வாக்களித்துள்ளேன். கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டும். பெங்களூரு மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்கிறார்கள். வரும் காலத்தில் இங்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை 2 முறை குறைத்துள்ளார். பணவீக்கம் தற்போது குறைந்துள்ளது. பணவீக்கம் குறித்து எங்களை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை. ஏனெனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பணவீக்கம் எப்படி இருந்தது என்பதை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.

எங்கள் கட்சி எப்போதும் ‘பஜ்ரங்பலி’ மற்றும் ஆஞ்சநேயரின் பஜனை பாடல்களை பாடுகிறது. கர்நாடகம் ஆஞ்சநேயர் பிறந்த மண். இங்கு வந்து காங்கிரஸ் கட்சி பஜ்ரங்தள அமைப்புக்கு தடைவிதிப்பதாக சொல்கிறது. இதைவிட முட்டாள் தனமான விஷயம் வேறு ஒன்றும் இல்லை.

பிரதமர் மோடியின் தலைமைக்கு கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மக்களை கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. பிரதமர் மோடியுடன் மக்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. நமது பிரச்சினைகளை பிரதமர் மோடி காது கொடுத்து கேட்கிறார் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.