X

பணவீக்கம் அதிகரிப்பின் எதிரொலி – காய்கறிகள் விலை உயர்வு

உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து சில்லரை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும்.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலை 36 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பருப்பு வகைகள் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.

தொழில் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 10 முக்கிய தொழில்கள் இரட்டை இலக்க சரிவை சந்தித்துள்ளன. மொத்தத்தில் தொழில் துறை உற்பத்தியில் 3 மடங்கு குறைவு ஏற்பட்டுள்ளது.

மின்சாரம், சுரங்கம் உற்பத்தி துறைகளில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கட்டிட தொழிலாளர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு உரிய அளவு வேலை கிடைக்காததால் அவர்களது செலவு அதிக அளவு குறைந்துவிட்டதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் உயர்வு காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி அதிக அளவு குறைந்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளது. கடன் கொடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மக்களிடம் பண புழக்கமும் குறைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

பணவீக்கம், உற்பத்தி குறைவு, செலவு குறைவு போன்றவை காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூலும் குறைந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வருகிற 18-ந்தேதி இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அதன் பிறகு தொழில்துறை உற்பத்தி மேம்படுமா என்பது தெரிய வரும்.

Tags: south news