பணம் சம்பாதிக்கும் திட்டத்தில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள அகர்நாத் கோவிலில் வழிபட்டபின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு தடுப்பது, தாமதப்படுத்துவது, திசைதிருப்புவது ஆகியவற்றில் தான் நம்பிக்கை. நர்மதை ஆற்று நீரை இந்த வறண்ட பகுதிக்கு கொண்டு வருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது வயதானவர்களுக்கு தெரியும். ஆனால் எதுவுமே செய்யவில்லை.

சர்தார் சரோவர் அணை கட்டுவதை காங்கிரஸ் தடுக்க முயன்றது. அந்த திட்டத்துக்கு எதிராக மனு மேல் மனு போட்டு தாமதப்படுத்தியவர்களை ஆதரித்தது. இந்த பாவத்தை செய்த காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது. நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை செலுத்தும். பணம் சம்பாதிக்க முடியாத திட்டங்களில் கவனம் செலுத்தாது. பா.ஜக. தான் நர்மதை நீரை இங்கு கொண்டு வந்தது. விடுபட்ட பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்வோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட 99 குடிநீர் திட்டங்களை முடிக்க எனது அரசு ரூ.1 லட்சம் கோடி அளித்துள்ளது. ஏழை மக்களை கொள்ளையடித்தவர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்னை திட்டுகிறார்கள். ஏழைகளுக்கு செல்ல வேண்டிய உணவு தானியங்கள் வேறு எங்கோ திருப்பி விடப்பட்டன. அதனால், 4 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தோம்.

ஏழைகளைக் கொள்ளையடித்தால், மோடி நடவடிக்கை எடுப்பான். அத்தகையவர்கள் பிடிபடும்போது என்னை திட்டுகிறார்கள். குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் மக்கள் திரண்டு வந்ததைப் பார்க்கும்போது பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools