Tamilசெய்திகள்

பணக்காரர்களின் பணத்தை எடுத்து ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம்! – ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலம் லாகிம்பூர் பாராளுமன்ற தொகுதி, போகாகாட் நகர் மற்றும் நாகாலாந்து மாநிலம் திமாபூர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் இருந்து அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டார். சாதாரண மக்களிடம் இருந்து எடுத்த பணத்தை சிலரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டார். இதன்மூலம் அவர் பொருளாதாரத்தில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டார். மக்களின் பணப்புழக்கம் நின்றுவிட்டது.

காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தில் பணம் செலுத்தப்படுவதன் மூலம் இந்த தேக்கநிலை சீரடையும். இதன்மூலம் மக்களின் கைகளில் பணம் புழங்குவது உறுதி செய்யப்படும். மக்களின் கணக்கில் பணம் போடப்படும் என்று கூறிய மோடி சில பணக்கார வர்த்தகர்களின் பாக்கெட்டுகளில் அந்த பணத்தை போட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கடந்த 4 ஆண்டுகளாக அந்த திருட்டு பணக்கார வர்த்தகர்களுக்கு சென்ற பணத்தை எடுத்து இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம். அந்த பணத்தில் ஒருவேளை அவர்கள் புதிய ஆடைகள் வாங்கலாம். இதனால் ஆடைகளுக்கு தேவை அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன்மூலம் பொருளாதாரத்தில் மீண்டும் பணப்புழக்கம் ஏற்படும்.

ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள 20 சதவீத ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் என்று காங்கிரஸ் உறுதி அளிக்கிறது. சிறந்த பொருளாதார நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை செய்த பின்னர் தான் இந்த தொகை வழங்க முடியும் என்று அறிவித்துள்ளோம்.

சிலர் பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் நான் இங்கே பொய் சொல்லவில்லை. செய்ய முடியாததை நான் சொல்லமாட்டேன். உங்களுடன் உள்ள நல்லுறவை மேம்படுத்தவே நான் விரும்புகிறேன். ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தாரே? அந்த பணம் எங்கே என்று பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

பண மதிப்பு இழப்பு மூலம் மோடி பொருளாதாரத்தில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டார். தங்களிடம் இருக்கும் பணத்தை டெபாசிட் செய்ய அனைவரையும் வங்கிகள் முன்பு வரிசையில் நிற்கவைத்தார். இது கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் சொன்னார்.

திருடர்கள் அனைத்து கருப்பு பணத்தையும் காவலாளி உதவியுடன் எடுத்துச் சென்றுவிட்டனர். மக்களின் காவலன் என்று கூறிக்கொள்ளும் காவலாளி உங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். அதனை பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. நாங்கள் உங்கள் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை பாதுகாத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *