பணக்கட்டுகளின் மீது காதலியை நடக்க வைத்த தொழிலதிபர்
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பணக்கட்டுகளை கம்பளமாக விரித்து, அதன் மீது தனது காதலியை நடக்க வைத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
‘மிஸ்டர் நன்றி’ என்ற பெயரில் பிரபலமானவராக அரியப்படும் செர்ஜி கோசென்கோ என்பவர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தொழிலதிபரின் காதலி ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது பணக்கட்டுகளை படிக்கட்டுகளாக அடுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் கம்பளம் போன்று பணக்கட்டுகளை விரித்து வைத்திருக்கும் காட்சிகள் உள்ளது.
அந்த பணக்குவியலின் மீது தொழிலதிபரின் கையை பிடித்தபடி காதலி நடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 4.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தொழிலதிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என ஒரு பயனரும், இது மிகவும் மோசமானது, பணத்தை அவமதிப்பது வெட்கக்கேடானது என சில பயனர்களும் பதிவிட்டுள்ளனர்.