X

பட்டு ரகத்திற்கான கைத்தறி நெசவாளர் விருதுக்கான பரிசுத்தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

மாநில அளவிலான பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் முருகனுக்கும், இரண்டாம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசு ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இளங்கோவுக்கும், பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சரவணனுக்கும், இரண்டாம் பரிசு சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்பாலனுக்கும், மூன்றாம் பரிசு மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரலேகாவுக்கும், என 6 விருதாளர்களுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை-அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசு ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.