Tamilசினிமா

பட்டியலின பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் – நடிகர் கார்த்திக் குமார் விளக்கம்

சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, “கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன்.அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே” என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே… உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த…” என்று கார்த்திக் பேசுகிறார்.

சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் கார்த்திக்கின் பேச்சு தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.